சென்னை: நிஜ பைலட் ஒருவருக்கு நடந்த உண்மைச் சம்வத்தை வைத்து 'மஹா' படத்தில் சிம்புவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகிவருகிறது 'மஹா'. இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அவரது மாறுபட்ட லுக்குடன் கொண்ட படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்ததன. அதே சமயம் சில சர்ச்சைகளும் எழுந்தன.
இந்தப் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இதையடுத்து அவரது லுக்கை கடந்த இருநாட்களுக்கு முன் படக்குழுவினர்கள் வெளியிட்டனர். பைலட் கேரக்டரில் நடித்திருக்கும் சிம்புவின் ஸ்டைலிஷான பைலட் லுக், ரசிகர்கள் மத்தியல் வரவேற்பைப் பெற்றிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் ஜமீல் கூறுகையில்,
'மஹா' படத்தில் நடிகர் சிம்புவுக்கு சிறப்பு தோற்றம்தான். ஆனாலும் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. கதையில் அவரது கேரக்டர் ஃபிளாஷ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடியதாக இருக்கும். படத்தில் அவர் பைலட்டாக நடித்திருக்கிறார்.
கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிம்புவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அவரது பெயர் ஜமீல்.
நடிகர் சிம்புவை போன்று ஒரு கச்சிதமான நடிகரை நான் பார்த்ததேயில்லை. தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக, மிக பிரபல நடிகராக இருந்தும், அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு டேக்கிலும், 'இது ஓகேவா, இன்னொரு முறை போகலாமா' என எந்த ஒரு அலட்டலுமின்றி கேட்டுக்கொண்டே இருந்தார்.
படப்பிடிப்புக்கு எப்போது வர வேண்டும் என கேட்டுக்கொண்டு நேரம் தவறாமல் முதல் ஆளாக அங்கு இருந்தார். படப்பிடிப்பில் வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை உற்சாகமூட்டியிருக்கிறது’ என்றார்.