இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதன் ஒருபகுதியாக தமிழ் திரையுலகம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. திரையரங்குகள் மூடப்பட்டதால் பெரிய படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டன.
குறிப்பாக பல கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பொங்கலன்று சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின.
ஆனால் அந்தப் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. மக்கள் யாருமே திரையங்கிற்கு வர ஆர்வம் காட்டவில்லை. இது திரையரங்கு உரிமையாளர் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியே சென்றால் தமிழ் சினிமாவின் நிலை படுமோசமாகி விடும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டு திரையரங்குகளுக்கு முழு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (பிப். 16) முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதிய படங்களை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'வீரமே வாகை சூடும்', 'எஃப்.ஐ.ஆர்' படங்களைத் தொடர்ந்து 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்', 'பீஸ்ட்', 'ராதே ஷ்யாம்', 'ஆர்.ஆர்.ஆர்', 'டான்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆச்சாரியா', 'மன்மதலீலை' உள்ளிட்ட பல படங்கள் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன.
இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் மூலம் மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வர தொடங்கி, பழைய நிலை திரும்பும் என எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
‘வலிமை’ வரும் பிப்ரவரி 24ஆம் தேதியும், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதியும், ‘ராதே ஷ்யாம்’ மார்ச் 11-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகின்றன. சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்' மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய வெற்றிமாறன்: விலை எவ்வளவு தெரியுமா?