தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாகக் கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன.
இதனையடுத்து ஜூன் மாத இறுதி முதல் கரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கிய நிலையில் மெல்ல மெல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சினிமா படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி கொடுக்காமல் இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று (ஆக.21) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட ரூ.1500 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன. முதல் வாரத்தில் அரண்மனை 3, சிவகுமாரின் சபதம், கோடியில் ஒருவன், உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், சுமோ, ஹாஸ்டல், அக்னி சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்காக காத்திருக்கின்றன.