ஹாலிவுட் திரைப்படங்களில் தனது அசாதாரண நடிப்பால் உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் லியானாட்டோ டிகாப்ரியோ. இவர் நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், பிளட் டைமண்ட், ரெவால்யூசனரி ரோட், இன்செப்சன், உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக கடந்த 1997ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலமடையச் செய்தது.
டிகாப்ரியோ, ஒரு நடிகராக மட்டுமின்றி சுற்றுப்புறச்சூழல் ஆர்வலராகவும் விளங்குகிறார். அந்த வகையில் இவர் உலக அளவில் பெரும் பிரச்னையாக இருந்துவரும சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து அவ்வபோது கருத்து தெரிவித்தும் வந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னை குறித்தும், அமேசான் காட்டுத்தீ குறித்தும் இவர் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஹாலிவுட் நடிகரும் டிகாப்ரியோவின் நண்பருமான ஹுயூக் ஜாக்மேன் ஏற்பாடு செய்திருந்த குளோபல் சிட்டிசன் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2016ஆம் ஆண்டு போடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய உலக தலைவர்களை சாடினார். மேலும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் முன்னெடுத்த பருநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் குறித்து விமர்சனம் செய்த தலைவர்களையும் அவர் கடுமையாக வசைபாடினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பல இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் பள்ளி, கல்லூரி, பணியிடம் ஆகியவற்றிற்குச் செல்லாமல் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் நமது பூமிக்கு எந்த மாதிரியான தலைமை வேண்டும் என்பதை ஒரு முன்னுதாரணமாக வைத்துள்ளனர். மேலும் பருவநிலை மாற்றம் குறித்து இனியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான நேரம் இதுவல்ல என்பதையும் அவர்கள் தைரியமாக எடுத்துரைத்துள்ளனர் என்பதை குறிப்பிட்டார்.
இறுதியாக இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பலரும் மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். அது எதிகாலத்தை கருத்தில் கொள்ளாமல் லாபத்திற்காக அவர்கள் பேசியதை உணர்த்தியது என்றார். இளைஞர்களின் பருவநிலை இயக்கத்திற்கான தேவையானது இதுவரை மனித வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது எனறார்.