தமிழ் சினிமாவின் கிளாசிக் காம்போவாகத் திகழும் ‘இசைஞானி’ இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் திரையில் ஏற்படுத்திய தாக்கத்தை சினிமா ரசிகர்களால் எளிதாக மறந்துவிட முடியாது. ஏனெனில், இருவருமே ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒருவர் இசையை மொழியாக்குவதிலும், மற்றொருவர் வசனமில்லாத மொழியை உருவாக்குவதிலும் கில்லாடிகள்.
உதாரணமாக ரஜினியின் நடிப்பில் 90களின் தொடக்கத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில், மகனை அனாதையாக்கிய குற்ற உணர்ச்சியுடன் அன்னையும், அன்னையால் அனாதையாக்கப்பட்ட ஏக்கத்துடன் மகனும், இருவருக்கும் இணைப்புப் புள்ளியான கூட்ஸ் வண்டியை பார்த்தபடி நிற்பார்கள். அப்போது காட்சிக்கு தேவையான வசனத்தை தன் மெல்லிய புல்லாங்குழல் இசையால் கடத்தியிருப்பார் இசைஞானி இளையராஜா. இங்கு அந்த காட்சிக்கு ஒளி கொடுத்த சந்தோஷ் சிவனையும் நாம் எளிதில் கடந்துவிட முடியாது. இப்படி இசைக்கு இளையராஜாவையும், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவனையும் ஆயுதமாகக் கொண்டு தளபதி படத்தை ஃபிரேம் பை ஃபிரேமாக செதுக்கியிருப்பார் மணிரத்னம்.
குறிப்பாக, மாவட்ட ஆட்சியரான தன் தம்பி அரவிந்த் சாமி வீட்டிற்கு ரஜினி சென்று தன் முன்னாள் காதலி ஷோபனாவை பார்க்கும்போதும் சரி, ஷோபனைவை போ... என ரஜினி அதட்டும்போதும் சரி, சற்று நேரம் அங்கு நிலவும் அமைதியை ராஜாவின் இசை நிரப்பியிருக்கும். மணிரத்னம் கடத்த விரும்பிய உணர்வையும் அந்த இசை வலுப்படுத்தியிருக்கும்.
அதேபோல், நாயகன் படத்திலும் பல சீன்களில் இருவரும் பூந்து விளையாடியிருப்பார்கள். இசையை மொழியாக்குவது, காட்சியை வசனமாக்குவது என இவர்களின் மாஸ்டர் பீஸாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சொல்லலாம். தன் தாத்தாவை பார்த்து பேரன் ‘நீங்கள் நல்லவரா? கெட்டவரா?’ என கேட்கும் கேள்விக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கமலின் வலியை ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலில் இடம்பெற்ற இசையை பின்னணியாக பயன்படுத்தி காண்பவரை சோகத்தில் ஆழ்த்தியிருப்பார் இளையராஜா, அதற்கு ஏற்றார்போல இந்தக் காட்சியில் கமலிடம் அழகாக வேலை வாங்கியிருப்பார் மணிரத்னம்.
தளபதி படத்தின் கோயில் காட்சிக்கு நிகராக நாயகன் கிளைமாக்ஸை ஒப்பிட்டு பேசுவது இந்த இடத்தில் சிலருக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இரண்டு காட்சிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை கவனியுங்கள். இரு காட்சிகளுமே சோகத்தை சொல்லுகிறது, காட்சிக்கு இசை, இசைக்கு காட்சி என இவர்களின் காம்போ இவ்விருவரின் தனித்துவத்தையும் நம் மனதில் விதைக்கிறது.
இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு தளபதி, நாயகன் மட்டுமின்றி மெளன ராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி என பல படங்களை செதுக்கிய இசையின் ராஜாவுக்கும், மணிரத்னத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!