மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா," இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்த அதிகம் பேரால் பேசப்படும் இந்தியைப் பொது மொழியாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பின. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது குஷ்பு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'நான் என் தாயின் வயிற்றில் இருந்த போது கேட்ட மொழியை பேசுகிறேன். என் அம்மா எனக்கு கற்பித்த மொழியைப் பேசுகிறேன். ஆனால், அதன் பின்னர் குடும்பம், அன்பு, மரியாதை, அதிர்ஷ்டத்தை எனக்கு கொடுத்த மொழியை நான் பேசி வருகிறேன். என் குழந்தைகள் என்ன மொழி பேச வேண்டும் என்பதை நான் தேர்வு செய்கிறேன். மொழி என்பது தேர்வாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது' என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தி கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை காயத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில்," தமிழ் மொழி நமது தாய் மொழி, மாநில மொழி, பழமையான மொழி. உலகிலேயே அழகான மொழி தமிழ் மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் மொழியை எல்லா மாநிலங்களிலும் பேச வைப்பது சாத்தியமல்ல. காரணம் இந்தி மொழி ஏற்கனவே பல மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்தி எந்த வொரு மாநிலத்தின் மொழியும் அல்ல. அது அதிகம் பேரால் பேசப்படுகிறது. இந்த தலைமுறையினர் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள இந்தி கற்றுக்கொள்ளட்டும். தேசிய கொடி, தேசிய விலங்கு இருக்கும் போது தேசிய மொழி இருக்கக்கூடாதா" என்று பதிவிட்டுள்ளார்.