கன்னடத்தில் வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ், ஆக்ஷ்ன் காட்சியில் மாஸ் காட்டியிருப்பார்.
1970களில் கோலார் தங்கச் சுரங்கத்தில் ஏழை மக்களை அடிமையாக நடத்தும் வில்லனை கொலை செய்வதற்காக உள்ளே செல்லும் கதாநாயகன், வில்லனை எப்படி கொன்றார் அங்குள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். தமிழிலில் இத்திரைப்படத்தை விஷாலின் விஎஃப்எஃப் நிறுவனம் வெளியிட்டது. தமிழிலும் இத்திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் யாஷ் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
சமீபத்தில் 'கேஜிஎஃப்' திரைப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்புக் காட்சி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஷ் நடித்துவருகிறார்.
இதற்கிடையே தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர்கள் நடிகர் யாஷை பெங்களூருவில் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யாஷ், கேஜிஎஃப் படத்தால் தமிழிலும் எனக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். என்னை சந்தித்தபோது அவர்கள் எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் நாங்கள் தமிழ்நாட்டில் ரசிகர் மன்றம் அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் பல முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் உள்ள நிலையில், தற்போது கன்னட நடிகரும் அந்தப் பட்டியலில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: விஜய் டிராப் செய்த கதை - 'பப்பி' நடிகரை வைத்து ஷூட்டிங்கை தொடங்கிய கௌதம் மேனன்