கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "கைதி படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன்.
சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும், பயிற்சியினால் மட்டும் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களைவிட எல்லா வகையிலும் ஓட்டுநருக்குத்தான் ஆபத்து அதிகம்.
மற்ற வாகனங்களைவிட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல, லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுநர்களின் பெருமை இப்போதுதான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்" என்றார்.
கைதி படத்தில் நெற்றியில் பட்டை போட்டுள்ளீர்களே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளதா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, "ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும்.
ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார். நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது என்னை வளர்த்த விதமாகக்கூட இருக்கலாம்" எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: சிவமைந்தன் கார்த்தி சிவபக்தனாக ருத்ர தாண்டவம் - நடிகை ஆர்த்தி