நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அவதாரம் எடுத்த திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவ கொலையை மையமாக வைத்து வெளியான இதில் ஸ்ரீராம், ஆடுகளம் முருகதாஸ், காயத்ரி ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு 'சிறந்த படம்- ரசிகர்களின் தேர்வு' விருதைத் தட்டிச் சென்றது.
இது குறித்து போஸ் வெங்கட் கூறுகையில், "நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் இந்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இயக்குநராக எனது முதல் முயற்சியான 'கன்னி மாடம்' வெளியானது.
அன்றைய தினம் பலரும் என்னை தொலைபேசியில் வாழ்த்தியது மட்டுமல்லாது, விமர்சன ரீதியாகப் பலரும் கொண்டாடினார்கள். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பது மறக்கவே முடியாது. எத்தனை படங்கள் இதற்குப் பிறகு இயக்கினாலும், முதல் படத்துக்குக் கிடைத்த பாராட்டு, வரவேற்பு என்பது தனிதான் அல்லவா.
இன்னும் 'கன்னி மாடம்' திரைப்படம் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், டொரண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படம் - ரசிகர்கள் தேர்வு" என்ற விருதை வென்றிருப்பதைப் பெருமையுடன் உங்களிடையே பகிர்ந்துகொள்கிறேன். இப்படியான விருதுகள் கிடைக்கும்போது தான், நம்மை இன்னும் உற்சாகமாகி மேலும் ஓடவைக்கும். 'கன்னி மாடம்' படத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.