கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், கன்னட சின்னத்திரை நடிகை அனிகாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கைப்பற்றினர். தொடந்து நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப் பிரபலங்களை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்க தொடங்கி உள்ளனர். தற்போது சஞ்சனா கால்ரானி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் டோப் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவரையும் சிசிபி அலுவலர்கள் கே.சி பொது மருத்துவமனைக்கு மாதிரிகளை சேகரிக்க அழைத்துச் சென்றனர்.
அப்போது, தங்களை ஏன் இங்கு அழைத்து வந்து சித்திரவதை செய்கிறீர்கள் என்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தங்களது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினர். இரண்டு மணிநேர விவாதங்களுக்கு பிறகு அலுவலர்கள் அவர்களை சம்மதிக்க வைத்து ரத்தம், முடி மாதிரிகளை சேகரித்தனர்.
பின்னர் இருவரின் மாதிரிகளும் தடய அறிவியல் ஆய்வகம், மடிவாலா - ஹைதராபாத்தின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
"குற்றஞ்சாட்டப்பட்டவர் சமீபத்தில் மருந்துகளை சாப்பிட்டாரா என்பதை இந்த சோதனைகள் உறுதிப்படுத்தும். மரிஜுவானா, கோகோயின், எம்.டி.எம்.ஏ மாத்திரைகள், மார்பின், ஹெராயின் போன்ற போதைப் பொருள்கள் முடிகள் மூலம் ஆறு மாதங்கள் வரை கண்டறிய முடியும்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.