மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை அதிகரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தனர்.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளிவைத்தனர். தற்போது இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் திறப்பு குறித்தான அறிவிப்பு வெளியானதும் 'தலைவி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.