உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து, ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியாக கங்கனா ரணாவத் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் கங்கனா வழங்கியுள்ளார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறார்.
பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தலைவி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.