சென்னை: ரஜினி, வைரமுத்து, மணிரத்னம் என எல்லோரும் எல்லோரிதிலும் கற்றுக்கொண்டோம். விரைவில் ராஜ்கமல் நிறுவனத்தின் 50ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தனது குருவின் சிலையை சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் திறந்தவைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய திரைப்பட விழாவில் தாமதமாக கெளரவித்திருந்தாலும் தக்க மனிதரை கெளரவித்திருக்கிறார்கள். ரஜினிக்கு விருது வழங்கவிருப்பது மிகவும் பொருத்தமானது. நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சற்றும் குறையாதது ரஜினி எடுத்துக்கொண்டது. ஆனால் அவர் வேறு பாணி, நான் வேறு பாணி. இது வைரமுத்து, மணிரத்னம் ஆகியோருக்கும் பொருந்தும்.
சினிமாத் துறையில் எத்தனை கோபம், பொறாமை வந்தாலும், எங்கள் கைகளை இன்னும் யாராலும் பிரிக்க முடியவில்லை. நானும் ரஜினியும் யார் என்ன கூறினாலும் உடனுக்குடன் பேசிக்கொள்வோம். அதான் எங்களுக்குள் பற்ற வைத்தவர்கள் குறைந்துவிட்டார்கள். ரஜினி திரையுலகுக்கு வந்த முதல் வருடமே அவர் ஐகான் ஆகியிருக்கிறார். 43 வருடம் தாமதமாகத்தான் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹேராம் மாதிரி படம் எடுத்தது ஏன் எனப் பலர் கேட்டார்கள். அதற்கு எங்கள் கனவுப் படம் எடுப்பதற்கான காசு கிடைத்த பிறகு எடுக்காமல் போனால் எவ்வளவு பெரிய பாவியாக நாங்கள் இருப்போம் என்றேன். என்னிடமிருந்த கற்றுக்கொண்டவர்களிடம் நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். எல்லோரும் எல்லாருக்கும் குரு.
மணிரத்னம், நானும் தனித்தனியே அலுவலகம் வைத்திருந்தாலும் எங்களுடைய கனவுகள் ஒன்றுதான். நேற்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்ட மணிரத்னம், இன்று இவ்வளவு படம் பண்ணியிருப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அன்று நாங்கள் கண்ட கனவுகளை தற்போது நனவாக்கி கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது
எனக்கு வைரமுத்துவை தெரிவதற்கு முன்பு அவருடைய வரிகள்தான் முதலில் எனக்குத் தெரிந்தது. இன்றைய காலகட்டத்தில் முக்கியமான கவிஞர் வைரமுத்து. தற்போது இவ்வளவு பேசும் வைரமுத்து, படமே இல்லை என்றாலும் இதைவிட கம்பீரமாக பேசுவார்.
சில எண்கள் போன்களிலிருந்து அழிக்க தோன்றாது. அதில் அனந்து, பாலசந்தர் எண்கள் என்னிடம் உள்ளது. தனிமையில் இருந்தபோது குழந்தைத்தனமாக அனந்து நம்பருக்கு போன் செய்தேன். அப்போது அவரது உறவினர் எடுத்தார். நானும் உறவினர்தான் என்றேன். இங்கு பாலசந்தர் சிலையை வைத்திருப்பதால், ஒவ்வொரு நாளும் நான் இங்கு வரும்போது அவர் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்ற பயம் என் தொழில் மீது ஏற்படுத்தும்.
அனைவரையும் கூட்டமாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் சாதனையாளர்களே என்னுடன் சேர்ந்து வியர்வை சிந்தியவர்கள். ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் இது. இதனை தொடங்கிவைத்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.