நடிகை வித்யா பாலன் சமூக வலைதளத்தில் கமல் நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காம ராஜன்' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான 'தி டர்ட்டி பிக்சர்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில் டாப் நடிகையாகத் திகழும் அவர், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது படங்கள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார்.
சமீபத்தில் வித்யாபாலன் தனது கணவருடன், கமல் நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தை பார்த்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
அதில், 'மைக்கேல் மதன காம ராஜன்' தன்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் படம். குறிப்பாக கமல் - ஊர்வசியின் காதல் காட்சிகளும் 'திருப்பு...திருப்பு...'என்று கமல் ஊர்வசியை கொஞ்சும் காட்சிகளும் தன்னை மிகவும் கவர்ந்த காட்சிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில், 'நான் நடிக்கும் படத்தின் கதையை நான் விரும்பி ஏற்று சுதந்திரமாக நடித்து வருகிறேன். என்னை வெறுப்பவர்கள் என் படங்களை பார்க்க வேண்டாம்' என்று அதிரடியாக தெரிவித்திருந்தார், வித்யா பாலன்.
இதனிடையே தற்போது கணிதமேதை 'சகுந்தலா தேவி'யின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் வாசிங்க: தமிழ்ப் பட தயாரிப்பாளரால் நேர்ந்த அவமானம் - விவரித்த வித்யாபாலன்