தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியுள்ளார். தமிழில் 'பழனி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான காஜலுக்கு தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துவந்த நேரம் அது.
நடிகையாக அறிமுகமாகி தனக்கான இடத்தை தக்கவைப்பது கடினமாக இருந்தது. தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கொடுப்பதில்லை. நடிகரை காதலிப்பது, இரண்டு பாடலுக்கு கவர்ச்சி நடனம் இதுதான் நடிகைகளின் வழக்கமான நடிப்பாக இருக்கும். காஜல் மாடலிங் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தாலும் வாய்ப்புகளை தேடிஅலைந்தார். அப்போதுதான் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி 'மகதீரா' படத்தில் புதுமுகமான நடிகையை நடிக்க வைக்க பலமுகங்களை தேடிக்கொண்டிருந்தார். அது காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்டாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ராஜமெளலிக்கு பிடித்த கதாநாயகியாக காஜல் தேர்வானார். தனது நடிப்புக்கு தீனிபோட்ட கதை என்று நினைத்து பார்த்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அந்தப் படத்தில் அவர் வந்து சென்ற காட்சிகள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. மெல்லிய சிரிப்பு, கண்களில் காதல், கவர்ச்சி நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்தார். 'மகதீரா' திரைப்படம் காஜல் அகர்வாலின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து காஜல் அகர்வாலின் கால்ஷீட் நிரம்பி வழிய ஆரம்பித்தது.
யாரெல்லாம் இவரை வெறுத்தார்களோ அந்த தயாரிப்பாளர்கள் இவரது கால்ஷீட்டை பெற தவமாய் தவம் கிடந்தனர். ஒரு புயல் காற்று போலத்தான் வாழ்க்கை என்பதை புரிந்துகொண்ட காஜல் வந்த படங்களில் எல்லாம் நடிக்க ஒப்புக்கொண்டார். சினிமாவில் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திகொள்ள அவ்வப்போது கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்தார். இதையடுத்து அவருக்கு சினிமாவில் ஏறுமுகம்தான். 'ஆர்யா-2' படத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த லிப் லாக் காட்சிகள் கிசுகிசுவை கிளப்பியது. அல்லு அர்ஜுனுடன் காதலா? என்ற வதந்தி செய்திகளும் பரவின. நடிகை ஆகிவிட்டால் வதந்தி கிசுகிசு வருவது சகஜம் என்பதை காஜல் நன்றாக தெரிந்துகொண்டிருந்தார்.
இதனால்தான் அவர் நடிகை என்ற அடையாளத்தை மீறி எந்தப் பக்கமும் காணமுடிவதில்லை. இதனைத்தொடர்ந்து, தமிழில் விஜய், அஜித், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் இவரது நடிப்பைத் தாண்டி 'துப்பாக்கி' படத்தில் விஜய்யுடன் போட்டி போட்டு ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களின் ஆல்டைம் பேஃவரைட்டாக உள்ளது.
சினிமா நடிகை பிம்பம் கொஞ்சம் காலம்தான் அதற்குள் சாதித்து காட்டவேண்டும் என்ற துடிப்பு காஜலுக்கும் உண்டு. ஆனால் பெண்களை முன்னிலைப்படுத்திவரும் கதைகளை ரசிக்கும் கலைஞர்கள் குறைவுதான். தயாரிப்பாளர்களும் முன்வருவதில்லை.
காஜல் அகர்வாலை பற்றி ரசிகர்களிடம் கேட்டால் சினிமா நடிகை, கவர்ச்சி நடனம் என்ற பிம்பத்தை தாண்டி தெரிவது இல்லை. நடிகை என்றாலும் நானும் ஒரு பெண்தான் சில மேடைகளில் பேசியுள்ளார். காஜல் தனது சொந்த செலவில் பழங்குடியின மக்களின் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்துவருவது எல்லோரையும் வியக்க வைக்கிறது. இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் காஜல் அளித்த பேட்டியில், லிப்லாக் காட்சி பற்றி உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில், 'காஜலா இப்படி பேசியது என்றே தோன்றும்.
வெட்கத்தை தாண்டிய முத்தம்
காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க இப்போதுள்ள நடிகைகள் தயங்குவது இல்லை. அந்தக் காட்சிகளை ரசிகர்களும் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காதல், முத்தக்காட்சியில் நடிப்பது அவ்வளவு எளிது அல்ல. முத்தக் காட்சிகளில் நடிக்க தனக்கு கூச்சமாக இருக்கும். படக்குழுவினர் முன்பு குட்டையான ஆடையை அணிந்துகொண்டு முத்தக் காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளேன். அதுவும் ரசிகர்களை தங்களை சுற்றி வேடிக்கை பார்ப்பார்கள். வெட்கம் இயல்புதான், அந்த நேரத்தில் வருகின்ற கூச்சம் யதார்த்தங்களை மீறி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலிகள் உள்ளன.
சாதாரண முத்தம்தான் என்று நினைப்பவர்களும் உண்டு. நானும் பெண்தான் என்பதை யாரிடம் புரியவைக்க முடியும். இதற்கெல்லாம் ஒரே பதில் எனது மவுனமான சிரிப்புதான்' என்று தெரிவித்தார்.
மவுனங்களால் பல ரகசியங்களை புதைந்து வைத்திருக்கும் காஜல் அகர்வாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!