சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரிதிபலிக்கும் 'தலைவி' மற்றும் 'குயின்' திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் படத்தின் இயக்குநர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார்.
இதேபோன்று, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராகத் தயாரித்து, இயக்கினார். 'குயின்' என பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் படங்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களைையும் கேட்டதறிந்த பின்னர், 'தலைவி' திரைப்படம், 'குயின்' தொடர் ஆகியவற்றை வெளியிட தடையில்லை என நீதிபதி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீபா மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள 'குயின்' டிரெய்லரில் தனது அத்தை ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரிதிபலிக்கும் வகையில் காட்சிகள் இருக்கிறது.
அதனால், கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய் ஆகியோர் 'குயின்' மற்றும் 'தலைவி' என்ற பெயிரில் நாடகமோ? திரைப்படமோ? இணையதளத் தொடரோ? வெளியிட நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக, டிசம்பரில் 'குயின்' வெளியாக தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அந்தத் தொடர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தத் தொடர் குறித்து அடுத்தகட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதனிடையே கங்கனா ரணாவத் நடிக்கும் 'தலைவி' படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டு டீஸர்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: 'குயின்' இணையதளத் தொடருக்கும், 'தலைவி' திரைப்படத்துக்கும் தடையில்லை!