தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரவு நீண்ட நேரமாக செல்போன் கடை திறந்துவைத்திருந்ததால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.
அவர்களைக் காவல் துறையினர் அடித்துக் கொலைசெய்ததாகக் கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் அடித்து துன்புறுத்திய காவலர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இவ்விகரம் தொடர்பாக செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனக்கு ரத்தத்தை பார்த்தால் மிகவும் பயம். ஆனால் சாத்தான்குளம் விவகாரத்தை பார்க்காமலேயே நான் மிகவும் கதறி அழுதேன். அந்த விவகாரம் என் மனதை மிகவும் பாதித்தது. காவல்துறையினரை தண்டிக்காமல், இடமாற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விவகாரம் என்னை ஏன் இந்த அளவிற்கு பாதித்தது என்றால் இதே போன்று சம்பவம் என் குடும்பத்திலும் நிகழ்ந்தது. அப்போது நான் சிறியவராக இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆம்... 2007ஆம் ஆண்டு நான் என் அண்ணனை இழந்தேன். எனக்கு காவல் துறையினரை பிடிக்காது. அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.