இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருக்க வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் வீட்டில் இருக்காமல் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிக்கின்றனர். காவல் துறையினர் பல முறை அறிவுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி வெளியே சுற்றுகின்றனர். இவ்வாறு வெளியே செல்பவர்களை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் ஆளில்லா சிறிய கண்காணிப்பு விமானங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆளில்லா சிறிய கண்காணிப்பு விமானங்களை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸால், நாம் அனைவரும் வீட்டுக்குள் முடக்கி உள்ளோம். 144 தடை உத்தரவு நமது நலனுக்காக, அரசு நம் மீது மிகுந்த அக்கறைக் கொண்டு எடுத்து வரும் நடவடிக்கை என்பதால் நாம் அதை தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
நமது நாட்டுக்காக தங்கள் உயிரை பணையம் வைத்து அயராது உழைத்துக்கொண்டு இருக்கும் காவல் துறையினர், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு என் கரம் கூப்பி தலைவணங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்கு என்னால் முடிந்த முகக்கவசங்கள், உடலை மூடிக்கொள்ளும் முழு உறைகள், கிருமி நாசினிகள் போன்றவற்றை, தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் செய்துள்ளேன் .
இதுதவிர ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க காவல் துறையினருக்காக ஆளில்லா சிறிய கண்காணிப்பு விமானங்களை வாடகைக்கு எடுத்துக்கொடுத்தேன். மேலும் எங்கள் தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, 10 கிலோ அரிசி, 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை சனிக்கிழமை முதல் கொடுத்துவருகிறோம். FEFSI நிறுவனத்திற்கும் 150 அரிசி மூட்டைகளை வழங்கி உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கரோனோ விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படக்குழு