'என் இனிய தமிழ் மக்களே' என்ற குரலுடன் திரையில் கும்பிடுபோட்ட கைகளுடன் பார்க்கும் போது தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பாரதிராஜா கொண்டுள்ள காதல் பாமரனுக்கும் எளிதாக விளங்கும்.
சிறு வயது முதல் கிராமத்துடன் தனது வாழ்வை ரசித்து வாழ்ந்த இவரால் திரையில் கிராமத்தை அழகாக காட்சிப்படுத்த முடிந்தது. கிராமத்து வாழ்வைப் பிரதிபலிக்க அவருக்கு இயல்பான மனிதர்கள் தேவைப்பட்டதால், அவர் தனது ஒவ்வொரு படத்திலும் புதுமுகங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

'16 வயதினிலே' படத்தில் இவர் புகுத்திய கதாபாத்திரங்களான சப்பாணி, பரட்டை, மயில் இவரைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 'விஷூவல் ட்ரீட்' ரசிகர்களின் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, தனது கேமிராவால் கிழக்கே போகும் ரயிலையும், யதார்த்த சூரியனையும் படம் பிடிக்க ஆரம்பித்தார். நாவிதனின் மகனும் கவிஞன் என்னும் ஒற்றை வரியை அழகாக விவரித்த இப்படம், புதுமுகங்களாக இருந்தாலும், அவரது முதல் படத்தைக் காட்டிலும், அதிக நாள் திரையரங்கில் ஓடியது.
சினிமாவில் பிரபலங்களை வைத்து படம் இயக்கினால் மட்டுமே வெற்றி என்கிற பிம்பத்தை உடைத்தவர் பாரதிராஜா. தான் பள்ளிப்பருவத்தில் டெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தபோது, அருகிலிருந்த அசலான மனிதர்களையே, இவர் படத்தின் கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களை தேடித்தேடி பயன்படுத்தினார்.
முதல் இரண்டு படங்களை கிராமியப் பிண்ணணியில் கொடுத்த இவர், நகரத்தின் பின்னணியில் வித்தியாசமான இளைஞனாக, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் சப்பாணி கமலை நவ நாகரிக இளைஞனாகவும், வித்தியாசமான மேனரிசங்களில் காட்சிப்படுத்தியிருப்பார்.
மனதில் தோன்றுவதை அப்படியே திரையில் வெளிப்படுத்துவர் இயக்குநர் பாரதிராஜா. அது, 'ரைட்டா; தப்பா' என யோசிக்க மாட்டார். இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பார்.
அதில், ' நான் ஒரு மாட்டு இடையன் வாசிக்கும் புல்லாங்குழல் இசை மாதிரி.

எனது இசையைக் கேட்டு நல்லா இருக்குன்னு சொன்ன சந்தோஷம்; மாறாக, இது என்ன ராகம்னு கேட்டா எனக்குத் தெரியாது', அது மாதிரி தான் என் படத்தை மக்கள் ஏத்துக்கிட்டா ஓகே.
இல்லைன்னா, அவங்களுக்கு அது பிடிக்கலேன்னு நினைச்சுப்பேன், அதை அனலைஸ் பண்ண தெரியாது எனக்கு' எனக் கூறியிருந்தார். வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக் கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களையும் இயக்கிய பாரதிராஜா, மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளையும் மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கியதோடு, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராகவும் விளங்கிவருகிறார்.
ஊர் நாட்டாமை பெருசுக்கும், பரிசல் குயிலுக்கும் இடையேயான காதல் கதை 'முதல் மரியாதை'. சிவாஜி கணேசன் திரையில் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லையென்ற நிலையில், இது அவருக்கு புதியப் பரிமாணத்தைத் தந்தது.
இளமையான வயதில் மட்டும் காதல் வருவதில்லை. நடுத்தர வயதைக் கடந்தோருக்கும் காதல் வரும் என ரசிகர்களுக்குப் பளீச் என சென்னவர் இயக்குநர் இமயம். இப்படி நடுவயதினருக்கு முதல் மரியாதை கொடுத்த பாரதிராஜா, இளைஞர்களை 'அலைகள் ஒய்வதில்லை' படத்தை இயக்கி கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில், இன்றளவும் வெளியான காதல் திரைப்படங்களை எடுத்து வரிசைப்படுத்தினால், ‘அலைகள் ஒய்வதில்லை’ காலம் கடந்த காதல் காவியம். மதங்களை கடந்து, காதலை பேசிய இப்படத்தில் கடைசியாக பூணூலையும், சிலுவையும் கழற்றி எறியவைத்து, அன்றே அவர் மத சீர்திருத்தத்தைப் பற்றி பேசியுள்ளார்.
எத்தனை வருடங்கள் ஆனாலும், தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் புகுத்தும் கதாபாத்திரங்களின் பெயர், இன்றைய தலைமுறையினரிடமும் நிழலாடும். ஒரு படத்தின் தலைப்பைத் தெரிவித்தால், அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் பெயரை ஒருவராவது அல்லது ஒரு முறையாவது உதிர்க்காதவர்கள் இருக்க முடியாது.
அலெக்ஸ் பாண்டியன், வேலு நாயக்கர் போன்ற கதாபாத்திரங்கள் பெயரைக் கூறும்போது, அதில் நடித்தவர்களும், அந்தப்படமும் நிச்சயம் நம் மனக்கண் முன்பு வந்து செல்லும் என்பதில் ஐயமில்லை.
அந்தவரிசையில், பாரதிராஜா திரையில் புகுந்திய சப்பாணி, பரட்டை, மயில் கதாபாத்திரங்கள் எப்போதும் நினைவில் இருந்து அழியாதவை. அப்படி பாரதிராஜா புகுத்திய கதாபாத்திரங்கள் வரிசையில், 'கடலோரக் கவிதை' படத்தில் இடம்பெற்ற முட்டம் சின்னப்பதாஸூக்கும் ஒரு இடம் இருக்கும்.

அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன்
கருப்பு கண்ணாடி வைத்து மிரட்டி கொண்டிருந்த சத்யராஜ், கையில் மீனும் ஆட்டுக்குட்டியும் கொடுத்து, ஒரு காதல் கதைத் திரைப்படத்தில் புதியப் பரிமாணத்தில் அவரைக் காட்டியிருந்தார் பாரதிராஜா.
'கல்லுக்குள் ஈரம்', ஒரு சிறந்த இயக்குநர், ஒரு நல்ல நடிகனாகவும் இருக்க முடியும் என, நிரூபித்தார் பாரதிராஜா. இப்படி ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை அறிந்த அவர், தமிழ் திரையுலகில் வெற்றி பெற அவருக்கு "பேக் போனாக" எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என, அனேகம் பேர் இருந்தனர்.
இயக்குநராக, தயாரிப்பாளராக பாரதிராஜா இருந்தாலும், நடிப்பு மீது அவருக்கு ஒரு தனிக்காதலே இருந்தது. தற்போது திரையில் வெளிவரும் படங்களில் இவர், குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் மட்டுமல்லாது, இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவைகளிலும் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். தமிழ் உணர்வால் ஈர்க்கப்பட்ட இவர் ஈழப்பிரச்னை, தமிழ்நாடு-கர்நாடக காவிரி பிரச்னை போன்றவற்றிலும் குரல் எழுப்பியவர் இயக்குநர் இமயம்.
தேசிய விருதுகள், இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, தமிழ்நாடு அரசின் விருதுகள் என பல விருதுகளை தன்வசப்படுத்திய அவர், சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலையைப் பாமரனுக்கும் கிட்டச் செய்ததில் பாரதிராஜாவின் பங்கு முக்கியமான ஒன்று.
அலைகளின் ஒசை, பறவைகளின் கீச்சு, வசந்தத்தின் வருகை போன்றவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாததைத் தனது கேமரா மூலம் திரையில் பல வண்ணங்களில் கொண்டு வந்து, தமிழ் சினிமாவில் புதியப் பாதையை உருவாக்கினார்.
பாரதிராஜா அழகியல் சினிமாவின் ஆதர்ச காதலன் என்பதை ஒருபோதும் யாரும் மறுப்பதற்கில்லை.