சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வருகின்றனர். உதாரணமாக, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை 'மகாநதி' என்ற தலைப்பில் படமாக எடுத்தனர்.
அதேபோல் மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி 'தலைவி' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.
ஓடிடியால் பிரச்னை
இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டாவது வாரத்திலேயே ஓடிடியில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
இப்படத்தை தயாரித்த விப்ரி மோஷன் பிக்ஷர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் ஆகியவை இப்படத்தை தமிழில் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கும், இந்தியில் நெட்பிளிக்ஸிற்கும் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், தலைவி திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது படத்தயாரிப்பு நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன்பிறகே, தலைவி திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகுமா என்று முடிவு தெரியவரும். இத்திரைப்படம், கரோனா ஊரடங்கு காரணமாக நீண்டு நாள்கள் கழித்து வெளிவர இருந்தது குறிப்பிடத்தக்கது.