கோழிக்கோடு: மலையாள திரைப்பட இயக்குநர் அலி அக்பர், இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பாஜகவின் ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வரும் அலி அக்பர், இதனை பேஸ்புக் நேரலையின்போது தெரிவித்துள்ளார். அலி அக்பர் என்ற தனது பெயரை ராமசிம்ஹன் என மாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த நேரலையில், "தற்போது முதல் நானும், எனது குடும்பமும் பாரதிய கலாசாரத்தைக் கடைபிடிக்க உள்ளோம். சமூக வலைதளங்களில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மறைவு குறித்து மோசமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகையால் உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என்னுடைய பதிவுக்கு சிரித்தவர்களுக்கு (HaHa Reaction) இதுவே எனது பதிலடி. என் பின்னூட்டங்களில் (comments) வரும் கருத்துக்களுக்கு நான் பதிலளித்த ஐந்து நிமிடத்தில் எனது அதிகாரப்பூர்வ பக்கத்தை பேஸ்புக் முடக்கியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகையால் நான் எனது மதத்தைவிட்டு வெளியேறுகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இந்தியர்கள்தான்.
அலி அக்பர் (எ) ராமசிம்ஹன் தற்போது வரியன் குன்னத்து அகமது ஹாஜி-ன் வாழ்க்கை வரலாற்றை, க்ரவ்டு ஃபண்டிங் (crowd funding) மூலம் திரைப்படமாக இயக்கி வருகிறார். மேலும், 'மாமா தர்மா மாமா தர்மா' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நிறுவியுள்ளார். அதன்மூலம் ரூ. 1 கோடி வரை நிதி திரட்ட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கைக்கடிகாரத்தை திருடியவர் அசாமில் கைது