சூர்யாவின் 39ஆவது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். அண்ணல் அம்பேத்கரை குறிக்கும் இந்த சொல்லை வைக்க ஒரு தைரியம் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகின்றனர்.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தின் பெயர் சூர்யா பிறந்தநாளான இன்றுதான் (ஜூலை 23) வெளியாகியிருக்கிறது. சூர்யா இதில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துவருகிறார்.
‘ஜெய் பீம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கறிஞர் உடையில் சூர்யா இருப்பது போலவும், அவர் உருவத்துக்கு கீழே பழங்குடியினர் சிலர் இருப்பது போலவும் இந்த போஸ்டர் இருக்கிறது. இது பழங்குடியின நல ஆர்வலர் சுதா பரத்வாஜ் குறித்த கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீமா கோரிகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களில் ஒருவர் சுதா பரத்வாஜ். வழக்கறிஞரான இவர், தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு நீதி கிடைக்க வாதாடி வந்தவர். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். பீமா கோரிகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களை வலதுசாரி சிந்தனையாளர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்கின்றனர்.
ஒருவேளை ‘ஜெய் பீம்’ படம் சுதா பரத்வாஜ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தால், வலதுசாரி சிந்தனையாளர்கள் சூர்யாவை நகர்ப்புற நக்சல்கள் பட்டியலில் இணைத்துவிடுவார்கள்.
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்