தமிழ் திரைப்பட உலகில் ’கேளடி கண்மணி’, ’ஆசை’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் வசந்த் சாய்.
இவர் தற்போது எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்து திரைக்கதை எழுதி, ’பூ’ பார்வதி, லட்சுமி ப்ரியா, சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர் என பல நட்சத்திரங்களின் நடிப்பில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23ஆவது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா, நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச பெங்களூரு திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வுசெய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழை பெய்வதால் இயக்குநர் வசந்த் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .