சென்னை: உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் (FIR) திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப் 10) அனைத்து திரையரங்குகளிலும் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், “எஃப்ஐஆர் திரைப்பட ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் உடனடியாக தமிழ்நாட்டில் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும்.
ஏற்கெனவே எஃப்ஐஆர் திரைப்படத்தை மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
குறிப்பாக இந்தப் படத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருப்பது வருத்தமளிக்கிறது. இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியான துப்பாக்கி படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்தது.
தற்போது எஃப்ஐஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கோட்டு சூட்டில் வேறமாறி ரஜினி... நெல்சன் இயக்கத்தில் 'தலைவர் 169' உறுதி...