செம்மொழி அந்தஸ்து பெற்ற நமது பெருமைமிகு தமிழ் மொழியை, கனடாவின் பிரபல பல்கலைக்கழகமான டொராண்டோ பல்கலைக்கழகம் அங்கீகரித்து, அங்குள்ள தமிழ் இருக்கைக்கு தூதராக இசையமைப்பாளர் டி. இமானை அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது.
இது குறித்து டி.இமான் கூறுகையில், ”உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரீகம், கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும். ’மொழிகளின் தாய்’ எனத் தமிழ் மொழி புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன். பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம்.
![imman appointed as Ambassador for Tamil chair of Toronto](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-mean-ambassador-script-7204954_19062020100936_1906f_1592541576_407.jpeg)
டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன். கனடாவின் முதல்தர பல்கலைக்கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க... 'கண்ணான கண்ணே' பாடல் உருவான விதம் - 8 நிமிட காணொலி வெளியிட்ட டி இமான்