இளையராஜாவின் 76ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் 'இசை கொண்டாடும் இசை' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவும் எஸ்பி பாலசுப்ரமணியமும் இணையும் இசை நிகழ்ச்சி இது என்பதோடு யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப் உள்ளிட்ட பிரபல பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட காத்திருப்புக்குப் பின் 7. 45 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் பலரும் இந்த இசை நிகழ்ச்சியைக் காண பல ஆயிரம் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஆவலுடன் வந்திருந்தனர்.
ஆனால் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவருக்களுக்கு நிகழ்ச்சியில் சரியான இருக்கைகள் இல்லை என ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இளையராஜா இப்படி அதிகமான விலைக்கு டிக்கெட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது ஏமாற்று வேலை எனவே இளையராஜா உடனடியாக இசை நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பிரச்னை செய்தனர்.
இதற்கிடையில், 'குறைவான கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள், அதிக கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டது நியாயமா? இது தன்னுடைய பெயரை மாசுபடுத்துவது போன்றது' என்று தனது மன வருத்தத்தை இளையராஜா பதிவு செய்தார்.
இருந்தாலும் ரசிகர்கள் பலர் இருக்கைகள் கிடைக்காமல் நிகழ்ச்சி நடத்தும் இடத்தை விட்டு வெளியேறினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் மேடையில் பாடப்பட்ட பாடல்கள் தங்களை உற்சாகப்படுத்தும் வகையில் இல்லை என்று தெரிவித்தனர்.