சென்னை: கதை முழுவதையும் படிக்காமல் கதைச்சுருக்கத்தை மட்டும் ஒப்பிட்டு ஒரே கதைதான் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' பட கதை விவகாரம் குறித்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஹீரோ'. இந்தப் படத்தின் கதை இயக்குநர் அட்லியின் உதவியாளர் போஸ்கோ பிரபு 2017இல் பதிவு செய்துவைத்த கதை என்று படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சைகள் எழுந்தன. அதற்காக கதாசிரியர் சங்கத்தில் பஞ்சாயத்தும் நடந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 'ஹீரோ' படத்தின் கதையும், போஸ்கோ பிரபுவின் கதையும் ஒன்றுதான் எனத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கே. பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அந்தக் கடிதத்தை பயன்படுத்தி நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளவும் என பாக்யராஜ் போஸ்கோ பிரபுவுக்கு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஹீரோ படத்தின் இயக்குநர் மித்ரன், இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஹீரோ படம் இயக்கம் மட்டும்தான் நான். இந்தக் கதையை எழுதியது எல்லாம் என்னுடன் உள்ள மூன்று எழுத்தாளர்கள்தான். அவர்களுக்கு நான் சன்மானம் கொடுத்துள்ளேன்.
ஒரு கதை கருவாக இருக்கும்போது ஒத்த சிந்தனை இருக்கலாம். ஆனால் அதை திரைக்கதையாக மாற்றும்போது ஒரே மாதிரி இருக்க முடியாது.


கதை முழுவதையும் படிக்காமல், கதைச்சுருக்கத்தை மட்டும் ஒப்பிட்டு இரண்டு கதையும் ஒன்றுதான் என எப்படி கூறமுடியும். என்னைப்போலவே அவரும் யோசித்தார் என்பதற்காக நான் ஏன் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
இவ்வாறு பிஎஸ் மித்ரன் தெரிவித்துள்ளார்.