கதாநாயகன் இல்லாமல் கதாநாயகியே ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தாங்கிப் பிடித்துச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளான எம்ஜிஆர் - சிவாஜி, இவர்களுக்கு அடுத்த தலைமுறையான ரஜினி - கமல், அஜித் - விஜய் என இரட்டைத் துருவங்களாகப் பாவித்து நடிகர்களைக் கொண்டாடிய அளவுக்கு நடிகைகளை கொண்டாடாமல் தவறிவிட்டது வரலாற்றுப் பிழை என்றே கூறலாம்.
பெண் கதாபாத்திரம் என்றால் காதலிப்பது, அழுவது, கதாநாயகன், தனது குடும்பத்தாரைக் கொஞ்சுவது க்ளிஸோவான கேரக்டராகவே தமிழ் சினிமாக்கள் மட்டுமல்ல, பிற மொழி சினிமாக்களிலும் சித்திரித்து வருவது எழுதப்படாத விதியாக இருந்தது.
எந்தத் திரைப்படமாக இருந்தாலும் கதாநாயகனை மையப்படுத்திய கதை, அவரை சார்ந்து பிற கதாபாத்திரங்கள் என பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் ஹீரோக்கள் மீது திணித்த சினிமாக்களுக்கு இடையே 'அவள் ஒரு தொடர்கதை', 'அவள் அப்படித்தான்', 'மனதில் உறுதி வேண்டும்' என்று ஒரு சில பாடங்கள் கதாநாயகிகள் மீதான கவனத்தை ஈர்த்தன.
'அவள் ஒரு தொடர்கதை' மைய கதாபாத்திரமான சுஜாதா, 'மனதில் உறுதி வேண்டும்' சுஹாசினி ஆகியோர் தனது ஆசைகளை, கனவுகளை துறந்து குடும்ப பாரத்தை சுமக்கும் சராசரி பெண்ணாக காட்டப்பட்டிருந்தார். ஒரு வேலை பெண்ணை மையமாக வைத்தாலும் கதை உருவானாலும் அவ்வாறே திரைக்கதை மட்டுமல்ல, காட்சிகளும் கட்டமைக்கப்பட்டிருந்தன.
இவற்றிலிருந்து சின்ன மாறுதலாகவும், ஒளியாகவும் ரசிகர்கள் மத்தியில் ஜொலித்தவர் - 'அவள் அப்படித்தான்' படத்தின் மஞ்சு (ஸ்ரீபிரியா). அவள் பேசிய உளவியல் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் தன் வழி இப்படித்தான் என்பதை அழுத்தமாக உணர்த்தினார்.
பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எப்போதாவது மாற்று சிந்தனையை ரசிகர்கள் மத்தியில் பாய்ச்சும் படங்கள் இருபதாம் நூற்றாண்டில் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. இந்தப் போக்கானது 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. கதைக்கு கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தை கதாநாயகிகளுக்கும் அளிக்கும் போக்கை இயக்குநர் முன்னிருந்தனர்.
2000ஆவது ஆண்டு முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்க, ப்ரியதர்ஷன் இயக்கிய சிநேகிதியே படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, இப்படியொரு மாற்றுச் சிந்தையை விதைக்க பல்வேறு காரணங்களில் ஒன்றாக விளங்கியது.
ஹீரோக்களைக் கொண்டாடி, ஹீரோயினின் நடனம், கவர்ச்சி போன்றவற்றை பார்த்த பழகிய ரசிகர்களின் கண்கள் அவர்களது நடிப்புத் திறமையை ரசிக்கத் தொடங்கியது. இதனால் கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளை வைத்து படங்களும் தயாராகின.
ஒரு காலத்தில் சினிமாவில் என்ன சார் கதை என இயக்குநர்களிடம் கேட்க கதாநாயகிகள் எப்போதும் அனுமதிக்கப்பட்டதே கிடையாது. படத்துல ஐந்து சாங் மேடம் ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஃபுல்லா நீங்க வர்றீங்க. மொத்தம் இத்தனை நாள்கள் தேவை என்று கதை விவாதத்தை நடத்துவார்கள் இயக்குநர்கள். இந்த வழக்கத்தை மாற்ற ஒரு நாயகி வருவார்.
ஒரு ஊருல ஒரு ராஜா அல்லது ஹீரோ... என்று கதையைத் தொடங்கிய இயக்குநர்கள் எங்கள் தலைவர் படம் இன்னைக்கு ரிலீஸ் எனக் கொண்டாடிய ரசிகர்களை, ஒரு ஊருல ஒரு ராணி அல்லது கதாநாயகி என்று இயக்குநர்கள் கதைசொல்லும் விதம், இன்னைக்கு எங்கத் தலைவி படம் ரிலீஸ் என ரசிகர்கள் சொல்லும்படி டிரெண்டை மாற்றிய கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை அனுஷ்கா.
கதாநாயகனுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் பேருக்காக வந்துபோவது, கவர்ச்சிப் பாடல்களுக்கு நடனமாடுவது போன்ற ஸ்டீரியோடைப்புக்குள் சிக்கித் தவித்த கதநாயகிகளின ஸ்டீரியோடைப்பை அனுஷ்கா 'அருந்ததி' மூலம் உடைத்து 'கதாநாயககி அல்ல கதையின் நாயகி'யாகவும் நடிக்க முடியும் என நிரூப்பித்துக் காட்டினார். பின் இவரைப் பார்த்து அறம் நயன்தாரா, 'நாயகி' திரிஷா, 'ஓபேபி' சமந்தா, 'கனா' ஐஸ்வர்யா ராஜேஷ் வரை இன்று தனியாக நடித்து திரைத் துறை 'ஒன் உமன்'களாக கலக்கிவருகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, தொடக்கத்தில் ஹீரோக்களின் நாயகிகளாக வலம்வந்த நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்றார் தற்போது சோலோ ஹீரோயினாக தனக்கென மார்க்கெட் உருவாக்கி அதற்கேற்றவாறு கதைகளிலும் நடித்துவருகிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற நடிகரை குறிப்பிட்டதுபோல், தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று நடிகையை அழைக்கும்விதமாகக் காலம் மாறியுள்ளது.