தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய், 'பாக்ஸர்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங், விளையாட்டு பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் கதையம்சம் கொண்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அருண் விஜய் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். பாக்ஸர் படத்திற்காக பீட்டர் ஹெய்ன் ஆலோசனையுடன் வியட்நாமில் பயிற்சி பெற்று வருகிறார்.
இது குறித்து இயக்குநர் விவேக் கூறுகையில், "அருண் விஜய் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பீட்டர் ஹெயின் மாஸ்டர் உதவியோடு, வியட்நாமில் உள்ள லின் ஃபாங்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டிள்ளது.
அருண் விஜய் கடுமையான பயிற்சிகள் எடுக்கும் வீடியோக்கள் நிறைய உள்ளன. ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்துக் கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது அவரது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார். திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.