சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சங்க பதிவு துறையின் அதிகாரி சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
கடந்த ஒரு வருடமாக சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி கண்கானிப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விஷால் தரப்பிலும், ராதாகிருஷ்ணன் என்ற சங்க உறுப்பினர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி விசாரணையில் இருந்தது வந்தது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக மஞ்சுளா என்பவரை நியமித்திருப்பதாகவும், அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவார் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஷால் தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியை வைத்து தேர்தல் நடத்தக் கூடாது என்றும், ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தரப்பில், கடந்த 4 முறை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதிகளே நடத்தி முடித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், அவருக்கு உதவ இரு நபர்களை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
நீதிபதிகள் நியமனம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்ட நீதிபதி, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு சம்பளமாக 3 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி வழங்க வேண்டும்
தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறித்த விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஜூலை30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.