வாஷிங்டன்: பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு வழக்குகளில் ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் குற்றவாளி என நியூயார்க் உச்ச நீதிமன்ற நீதிபதி உறுதிப்படுத்தினார்.
கடந்த 5 நாட்களாக ஏழு ஆண்கள், 5 பெண்கள் அடங்கிய அமர்வுடன் சுமார் 26 மணி நேரம் தீவிர ஆலோசனைக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு வழக்கில் ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் குற்றவாளி என நியூயார்க் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து கைவிலங்கு மாட்டப்பட்டு வெயன்ஸ்டீனை போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை வேறொரு நாளுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வெயின்ஸ்டீன் மீதான மற்றொரு பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையும் லாஸ் ஏஞ்சலில் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பாலியல் குற்றவியல் சட்டத்தின்படி, தயாரிப்பு உதவியாளர் மரியம் ஹேலே என்பவரை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வெய்ன்ஸ்டீன் மீது முதல் கட்ட பாலியல் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த குற்றத்துக்காக குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள்வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து நியூயார்க் உணவகம் ஒன்றில் வளர்ந்து வரும் நடிகை ஒருவரை வன்புணர்வு செய்ததாக வெயின்ஸ்டீன் மீது முன்றாம் கட்ட பாலியல் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்தக் குற்றத்துக்காக அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அவருக்கு விதிப்படலாம்.
67 வயதான வெயின்ஸ்டீன் மீது மேலும் மூன்று பாலியல் வழக்குகள் இருப்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்றும் ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில், ஹாலிவுட் முன்னணி தயாரிப்பாளராகத் திகழ்ந்த வெய்ன்ஸ்டீன் மீது நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தல் புகார்களை வெளிப்படுத்தினர்.
கடந்த காலங்களில் தாங்கள் வெய்ன்ஸ்டீனால் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர்கள் வெளிப்படையாக பேசிய நிலையில், MeToo இயக்கம் உருவெடுத்தது.
ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த MeToo இயக்கம், இந்திய திரையலகத்திலும் பிரதிபலித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் நடிகைகள் மீது பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட சில பிரபலங்களின் முகமும் வெளிச்சத்துக்கு வந்தது நினைவிருக்கலாம்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் வெயின்ஸடீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணை!