ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஜிப்ஸி திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜிப்ஸி இரண்டாவது வாரமாக தொடர்ந்து மக்களின் பேராதரவோடு பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் நலன் கருதி, மார்ச் 31ஆம் தேதி வரும் அனைத்து திரையரங்குகளையும் மூடும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆகையால் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு ஜிப்ஸி தொடர்ந்து மறுவெளியீடு செய்யப்படும். அப்போது உங்களது பேராதரவை தந்து திரைப்படத்தை வெற்றியடை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஜீவா, நடாஷா சிங், மலையாள நடிகர்கள் சன்னி வெயின், லால் ஜோஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் காதல் கலந்து பயணப் படமாக ஜிப்ஸி அமைந்துள்ளது.
நாட்டு நிகழ்வுகளையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் விதமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. பின்னர் மறு தணிக்கை செய்யப்பட்ட இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிவைக்கப்பட்ட பின்னர் மார்ச் 6ஆம் படம் உலகம் முழுவதும் வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சக ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. சினிமாப் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வந்த நிலையில், தற்போது கரோனா பீதி காரணமாக திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக, சென்சாரில் சிக்கல் எழுந்த நிலையில், சில காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அந்தக் காட்சிகளை, சென்சாரில் அனுமதிக்கப்படாததன் காரணத்தை குறிப்பிட்டு ஸ்னீக் பீக் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.