ஒன்றிய அரசின் புதிய ஒளிப்பதிவுச் சட்டத்திருத்த மசோதாவுக்குப் படைப்பாளிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி செய்தியாளர்களை இன்று (ஜூலை 8) சென்னையில் சந்தித்தார்.
அவர் கூறியதாவது, ''காலம் மாறும்போது சட்டமும் மாறும். அரசு சம்பந்தப்பட்ட துறைகளிடம் கலந்து ஆலோசனை செய்து வரைவு கொண்டுவர வேண்டும். எனது குற்றப்பத்திரிகை படத்திற்கும் இதுபோன்ற பிரச்சினையைச் சந்தித்தேன். 1993ஆம் ஆண்டு தணிக்கைச் செய்யப்பட்ட படத்தைத் திரைக்குக் கொண்டுவர 14 ஆண்டுகள் தேவைப்பட்டன.
தணிக்கை அளித்தபின் தணிக்கையை மாற்றி அமைக்கலாம் என்றால் திரைப்படத் துறையை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒன்றிய அரசின் இந்த முடிவு சர்வாதிகாரத்தின் உச்சம். படைப்புச் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும். விமர்சனம் வரக்கூடாது என்றால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத அரசு, அழிவைச் சந்திக்கும்.
அனைத்துக் கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது யாருக்கும் நல்லதல்ல. பாஜகவின் இந்த நடவடிக்கை அக்கட்சிக்கு நல்லதல்ல. ஒன்றிய அரசின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு வாழ்த்துகள். எங்களது குறைகளையும், ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். சட்டத்திருத்தம் வேண்டும்.
ஒளிப்பதிவுச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்தான், ஆனால் படைப்பாளி சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற அபாயங்கள் வேண்டாம். மேலும் என் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் சில நபர்கள் தங்களுக்கு வேண்டிய பத்திரிகை மூலம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பாஜக பிரமுகரின் தாய்