ஏ.ஆர். முருகதாஸின் ‘கத்தி’ படம் வெளியாகும் வேளையில் மீஞ்சூர் கோபி என்னும் நபர் இது என்னுடைய கதை என வழக்கு தொடுக்கிறார். பெரிய படங்கள் வெளியாகும்போது புகழ்ச்சிக்காக இதுபோல் சிலர் வழக்கு தொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என பலரும் அதை கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாகும்போது, மீஞ்சூர் கோபி இயக்கத்தில் உருவாக இருந்த ‘கருப்பர் நகரம்’ படத்தில் இடம்பெற இருந்த சில காட்சிகளை ரஞ்சித் திருடிவிட்டார் என அப்படத்தின் தயாரிப்பாளர் பாலு வழக்கு தொடுத்தார். இந்த இரு பிரச்னைகளின்போதும் கோபி என்ற பெயர் மக்களின் செவிகளைச் சென்றடையவில்லை.
‘கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின்போது சர்ச்சையை ஏற்படுத்திய மீஞ்சூர் கோபி (எ) கோபி நயினார் தனது முதல் படத்தை நயன்தாராவை வைத்து இயக்குகிறார் என்ற செய்தி வெளியானது. அப்போது நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருந்த தருணம். நயன்தாராவை வைத்து கோபி நயினார் என்ன பெரிதாக இயக்கிவிடப் போகிறார் என்ற எகத்தாளப் பேச்சுகள் அவர் காதுகளை சென்றடையாமல் இல்லை. அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பட வேலைகளில் பிசியானார் கோபி நயினார். ‘அறம்’ என அந்தத் திரைப்படத்துக்கு பெயரிடப்பட்டது.
அறத்தை நிலைநாட்டிய கோபி
‘அறம்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ட்ரெய்லர், டீசரை பார்த்தவர்களில் சிலர், என்னப்பா இது வழக்கம்போல விவசாயம், தண்ணிப் பிரச்னைதான் போல என சலித்துக்கொள்ளவும் செய்தார்கள். ஆனால் ‘அறம்’ அதையும் தாண்டி பேசியது, அதிகாரவர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலித்தது.
கம்பீரமான மாவட்ட ஆட்சியராக தோன்றிய நயன்தாராவின் நடிப்பு காண்போரை சிலிர்க்க வைத்தது. நயன்தாராவின் நடிப்புத்திறனை அருமையாக வெளிக்கொணரச் செய்திருந்தார் கோபி நயினார். அடித்தட்டு மக்களை அதிகாரவர்க்கம் வஞ்சிப்பது பற்றி பல்வேறு பிரச்னைகளை எடுத்துப் பேசி அறத்தை நிலைநாட்டியிருந்தார்.
தண்ணீர் பிரச்னை
‘அறம்’ திரைப்படத்தின் முதல் பாதி தண்ணீர் பிரச்னை குறித்து அழுத்தமாக பதிவு செய்திருந்தது. 'காலரா, வாந்தி பேதி வந்து செத்த மக்கள் இனி தாகம் எடுத்து சாகப்போறாங்க' என முதியவர் ஒருவர் பேசும் வசனம் குடிநீர் பிரச்னை குறித்த பயத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் பெருநிறுவனங்கள் நீர்வளத்தை சுரண்டுவதற்கு கோபி நயினார் தன் வசனங்களின் மூலம் சாட்டையடி கொடுத்திருப்பார். 'எத்தனையோ வறட்சி காலத்தையும் சமாளித்து வாழ்ந்துருக்கோம், என்னைக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்துச்சோ, அன்னைக்கு ஆரம்பிச்சது இந்த தண்ணிப் பிரச்னை' என்பார். மனிதகுலம் மிகத் தீவிரமான தண்ணீர் பிரச்னையை சந்திக்கப் போகிறது என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துவரும் வேளையில், அதுபற்றிய புரிதலை கொஞ்சமேனும் மக்களிடம் கடத்தியிருக்கிறது ‘அறம்’.
அறிவியல் வளர்ச்சி அடித்தட்டு மக்களுக்கானது
போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர் சோமராஜ் என்பவருடன் இணைந்து டாக்டர் அப்துல் கலாம் எடை குறைவான காலிபர் ஷூக்களை உருவாக்கினார். இதுவரை எத்தனையோ உயர் தொழில்நுட்பக் கருவிகளை பல தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சேர்ந்து தயாரித்திருக்கிறீர்கள், உங்களுக்கு பிடித்த தயாரிப்பு எது என அப்துல் கலாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட எடை குறைவான காலிபர் ஷூக்கள்தான் என பதிலளித்தார்.
ஆழ்துளை கிணறில் ஒரு குழந்தை சிக்கிக் கொள்வதை மையமாக வைத்து அடித்தட்டு மக்களுக்கான அரசியலை பேசியிருப்பார் கோபி நயினார். இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் ஏவுகிற வேளையில், இங்கு மலக்குழியில் விஷவாயு தாக்கி மலம் அள்ளும் தொழிலாளி உயிரிழந்திருப்பான். தொழில்நுட்பத்தில் எவ்வளவு முன்னேறி என்ன பயன், மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலநிலையைத் துடைப்பதற்கு அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பது கேள்விக்குறி!
அரசாங்கம்னா நான் மக்கள்னு நினைக்கிறேன்
மக்களுக்காக போராடும் நயன்தாரா கதாபாத்திரத்தை பார்த்து, நீ என்ன அரசாங்கத்துக்கு எதிரா செயல்படுறியா? என உயர் அலுவலர் ஒருவர் கேட்கிறார். அதற்கு நயன்தாரா, 'அரசாங்கம்னா நான் மக்கள்னு நினைக்கிறேன்' என்பார். அரசு அலுவலர்கள் மக்கள் பிரச்னைகளுக்கு குரல்கொடுக்க வேண்டும், அவர்கள் மக்கள் சேவகர்கள் என்பதையும் ‘அறம்’ திரைப்படம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்லாது, களத்திலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல்கொடுக்கக் கூடியவர் கோபி.
'முன்னேறி அடிக்கிறதுதான் வீரம், என் போராட்டமே இந்த புரிதல்தான்' என திரைத்துறையில் போராடி வெற்றிகண்ட அறம் கோபி நயினாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.