த்ரீ கிங்ஸ், ஓசன்ஸ் லெவன், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கான், கிராவிட்டி உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜார்ஜ் க்ளூனி. ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஸ்டைலிஷ் ஆன நடிகர்கள் என்று ஒரு சிலரையே குறிப்பிட முடியும். அந்த வரிசையில் டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் ஜார்ஜ் க்ளூனியே உள்ளார்.
இவர் தனது கேஷுவலான நடிப்பால் திரையில் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சால்ட் பெப்பர் லுக்கிலும் தோன்றி க்ளாப்ஸ் அள்ளினார். பின்னாளில் தமிழிலில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தபோது அனைவரும் ஜார்ஜ் க்ளூனியையே நினைவுகூர்ந்தனர்.
ஜார்ஜ் க்ளூனி 2014ஆம் ஆண்டு நீ அலாமுதின் (அமல் க்ளூனி) என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமல் க்ளூனியின் சகோதரியான டலா அலாமுதின் லீ டாலெக் என்பவர் சிங்கப்பூரில் அவரது கணவருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், லீ டாலெக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது கணவரின் பிஎம்டபுள்யூ சொகுசு ரக காரை எடுத்துக்கொண்டு டெம்சே சாலையில் இருக்கும் இரவு விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மதுபானங்களை அருந்திய அவர் குடிபோதையில் தனது காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சூழலில் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் போக்குவரத்து காவல் துறையினர் லீ டாலெக்கின் காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்த காவல் துறையினர் லீ டாலெக்கை சுவாச சோதனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் மதுபோதையில் இருப்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் போக்குவரத்து நீதிமன்றம், ஜார்ஜ் க்ளூனியின் மைத்துனி லீ டாலெக்கிற்கு மூன்று வாரம் சிறை தண்டனையும் ரூ. 4.5 லட்சம் அபாராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக லீ டாலெக்கிற்கு வாகனம் ஓட்ட நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
லீ டாலெக் இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறுவது முதல்முறையல்ல முன்னதாக 2013ஆம் ஆண்டு செய்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.