நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளன்று, கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே கமல்ஹாசனுக்காக புதுமையான முறையில் வாழ்த்து தெரிவிக்க கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 'ஸ்டிரிங் ஆர்ட்' என்ற கலையின் மூலம் கமலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
கோயம்புத்தூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீவகவழுதி. மாஸ் கம்யூனிகேஷனில் பட்டம்பெற்ற இவர், ஓவியத்தின் மீது கொண்ட தீராத காதலால் தொடர்ந்து பலவகையான படைப்புகளை உருவாக்கி வந்தார். ஓவியக்கலையில் உள்ள புதுப் பரிணாமத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நூல் ஓவியங்களை (String Art) படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
கமலின் ரசிகரான ஓவியர் சீவக வழுதி, புதுமையான முறையில் அனைவரும் வியக்கும் வண்ணம் தனது படைப்பை உருவாக்கினார். 28 நாள்களில், 250 மணி நேரத்தில், 13 ஆயிரம் ஆணிகள், 8 கிலோ மீட்டர் நீள ஸ்ட்ரிங், மரத்தினால் ஆன போர்டு ஆகியவற்றைக் கொண்டு கமலின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இந்தப் படைப்பை கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்த சீவக வழுதி, இதுபோன்ற சிரமமான படைப்புகள் வெற்றியைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார். சீவக வழுதியின் இந்த புதுவிதமான படைப்பு, கமல்ஹாசனின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி வாழ்த்துடன் வெளியான ஆர்.கே. சுரேஷின் 'விசித்திரன்' புது லுக் போஸ்டர்