ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிய புகழ்பெற்ற தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. இத்தொடருக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். வெறித்தனமான என்றால் சும்மா இல்லை, இத்தொடரின் கடைசி எபிசோட் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ஆன்லைனில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெட்டிசன் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.
இத்தொடரில் டிரியன் லேனிஸ்டர் என்ற கதாபாத்திரத்தில் பீட்டர் டிங்க்லேஜும், கால் டிராகோ என்ற கதாபாத்திரத்தில் ஜேசன் மோமோவாவும் நடித்திருந்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள 'குட் பேட் & அன்டெட்' (Good Bad & Undead) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மனித ரத்தத்தைக் குடிக்கும் வேம்பயர்களை வேட்டையாடும் ஒருவனுக்கும்; ஒரு வேம்பயருக்கும் இடையில் ஏற்படும் நட்பை அடிப்படையாகக் கொண்டது 'குட் பேட் & அன்டெட்' நாவல். இதில் வேம்பயர்களை வேட்டையாடுபவராக பீட்டர் டிங்க்லேஜும், வேம்பயராக ஜேசன் மோமோவாவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை லெஜண்ட்ரி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடருக்காக பீட்டர் டிங்க்லேஜ் இதுவரை நான்கு எமி விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், எக்ஸ் - மேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஜேசன் மோமோவா, டிசி காமிஸின் அக்வாமேன் கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இதையும் படிங்க: 501 கிலோ எடையை அசால்ட்டாய் தூக்கிய ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நாயகன்!