வெறும் 'எஸ்கிமோ நாயாகவே' கதிரை நினைத்துக்கொண்டிருக்கும் யாழினிக்கு, அவன் எப்படி வாழ்க்கையில் மிக முக்கியமானவன் ஆகிறான் என்பதை முதிர்ச்சியுடன் சொல்லியிருப்பார் இயக்குநர் நலன் குமாரசாமி. இத்திரைப்படம் சினிமா உலகுக்குள் நுழைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
'ஒருசில வாய்ப்பு வாழ்க்கைல ஒரு தடவைதான் வரும், அத மிஸ் பண்ணிட்டோம்னா, அந்த மிஸ் பண்ண ஒரு வாய்ப்பையும் நெனச்சி வாழ்க்கை முழுசா வீண் ஆயிடும் சார்'. யாழினி வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு தருணத்தில் இன்டர்வியூ நடத்தும் ஹெச்ஆரிடம் கதிரவன் பேசும் வசனம் இது. யாழினிக்கு இதைச் செய்ய அவளுக்கு கதிரவன் காதலனோ, நண்பனோ அல்ல. அவள் எதிர் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு அடியாள்.
'காதலும் கடந்து போகும்'- இந்தத் தலைப்பிலேயே இது நிச்சயம் ஒரு காதல் படமாகத்தான் இருக்கும் என்று நாம் எண்ணிவிடுவோம். ஆனால் காதல், நட்பு என எந்த ஒரு உறவும் இல்லாமல் இருவருக்குள் இருக்கும் பேரன்புதான் இப்படம். 'மை டியர் டெஸ்பரேடோ' என்னும் தென் கொரிய படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்தான் 'காதலும் கடந்து போகும்'. சுமார் 40 லட்சம் ரூபாய் கொடுத்து ரீமேக் செய்வதற்கான காபிரைட்ஸை இப்படத்திற்காக நலன் குமாரசாமி வாங்கியுள்ளார்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு பெற்றோரின் வற்புறுத்தலையும் மீறி சென்னைக்கு வரும் பெண்தான் யாழினி. பல திரைப்படங்களில் காட்டப்படும் ஹீரோவுக்கான காதலியாக இல்லாமல், வேலை செய்து லட்சியத்தை அடையும் பெண்ணாக இருக்கிறாள். சில காலம் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறாள். அந்தக் கம்பெனியை இழுத்து மூடவே, தான் வைத்திருக்கும் ஐடி கார்டை கடற்கரை மண்ணில் புதைத்துவிட்டு வேறு ஒரு சின்ன வீட்டிற்கு செல்கிறாள்.
புதிதாக குடியிருக்கும் வீட்டின் எதிரில் இருக்கும் கதிருடன் ஒத்துப்போகாத சூழ்நிலையே அவளுக்கு ஏற்படுகிறது. முதலில் கதிரை பார்க்கும்போதே தன் உடமைகளை வைத்துக்கொண்டு வாசற்படி அருகே யாழினி அப்பாவியாய் நிற்கிறாள். அவளுக்கு உதவி செய்யாமல் அவன் இரக்கமின்றி கடந்து செல்கிறான். அவன் ஒரு அடியாள் என்று தெரிந்தவுடன், பெப்பர் ஸ்பிரே வாங்க யாழினி செல்வது நாம் நிச்சயம் எதிர்பார்க்கவேண்டிய ஒன்றுதான். பின்னாளில் அவனுக்காக அவள் வாங்கிய அந்த ஸ்பிரே தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒரு உயர் அலுவலரிடம் இருந்து அவளை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
சிறிது சிறிதாய் கதிரவனால் எந்த ஒரு பாதிப்பும் தனக்கு ஏற்படாது என உணரும்போதுதான் யாழினி அவனிடம் 'பசிக்கிறது, சாப்பிட போலாமா என கேட்பாள்'. அவளிடம் தவறாக நடக்க முயன்றவனை கதிர் அலுவலகத்தில் வைத்து அடித்த பிறகுதான் இருவருக்குமான அன்பை பார்வையாளர்களால் உணரமுடியும். காவல்நிலையத்தில் இருந்து இருவரும் ஆட்டோவில் வந்துகொண்டிருக்கும்போது இருவருக்குமிடையில் எந்தவொரு வசனமோ, உணர்ச்சி குவியலோ இருக்காது. யாழினியும் கதிரும் எடுக்கும் ஒரேயொரு செல்ஃபி இருவருக்குள்ளும் இருக்கும் விவரிக்கமுடியாத அன்பை வெளிப்படுத்தும்.
இந்தத் திரைப்படத்தில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு வசனங்கள் பெரிய அரசியலை பேசிவிட்டுப்போகும். வேலை கிடைக்கவில்லை என யாழினி கதிரிடம் கூறுகையில், 'வேலை இல்லாதது உன் தப்பில்ல, இந்த நாட்டோட தப்பு' என கதிர் கூறுவான். பிறகு இருவரும் தண்ணி அடிக்கும் காட்சியில் போதையில் இருக்கும் யாழினி' தமிழ்நாட்ல யாருதான் சார் இன்ஜினியர் இல்ல?' எனும்போது எதோ ஒரு மூளையில் பெயரளவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலைக்காக அலையும் இளைஞர்களின் நிலைமையை பிரதிபலிக்கும். யாழினி மயக்கமுறும்போது அவளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு 'சத்து மாத்திர சாப்பிட்டா உடம்பு வீக் ஆகுமா’ என கேட்பது, அருகிலேயே இன்சோம்னியா (Insomnia) என சொல்லிக்கொண்டு செல்போன் நோண்டிக்கொண்டிருக்கும் நபர்- இவையனைத்துமே குமாரசாமிக்கே உண்டான சிறப்பம்சங்கள்.
கதை முழுவதும் இருவரை சுற்றியே நகர்ந்தாலும், கதிருடனே சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞன், கதிரின் பார் ஓனர் ஆகவேண்டும் என்ற கனவை வைத்தே அவனிடமிருந்து வேலை வாங்கிக்கொள்ளும் அவன் முதலாளி, யாழினியின் தந்தை என ஆங்காங்கு வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கதைக்கு கூடுதல் பலமாகவே இருந்தன.
ஒரு அடியாள் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற டெம்பிளேட்டை இந்தப் படத்தில் இயக்குநர் உடைத்திருப்பார். தன் முதலாளி தன்னை சுயநலமாக பயன்படுத்திக்கொள்வது தெரிந்ததும், தனக்காக சிறைக்கு செல்லவிருக்கும் முரளியிடம், 'நீ உள்ள போயிட்டு வந்ததும் உன்ன கொண்டாடுவாங்கன்னு நெனைக்கிறியா, உன்ன ஒருத்தன் சீண்டமாட்டான்' என திட்டி அனுப்புவது, ஏரியா சிறுவர்கள் பெரிய கடையில் திருடி மாட்டிக்கொண்டதும் அவர்களுக்காக கடைக்காரரிடம் 'திருடாதனு சொல்லு, கடைபக்கம் வராதனு சொல்லாத.. எங்க ஏரியால கடைய போட்டுட்டு எங்கள வராதனு சொல்றியா' என்னும் வசனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும்.
தனது குடும்பம் மூன்று தலைமுறையாக முதலாளி குடும்பத்திற்கு உழைக்கிறது என்றும், அதற்கு மேலே போய் பார் ஓனர் ஆக வேண்டும் என்பதுதான் கதிரின் குறிக்கோள். அது சாதாரண விஷயமாக தெரிந்தாலும், பார் ஓனர் ஆகிவிட்டால் தனக்கு கீழ் அடியாள் கிடைக்கமாட்டான் என்று அவனை சுயநலத்துக்காகவே பயன்படுத்தும் கதிரின் முதலாளி இன்று இருக்கும் பலரது முகத்தின் பிம்பம்தான்.
நமக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒருவர் நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையில் நுழைந்து, நாம் எண்ணிகூட பார்த்திராத அளவுக்கு நம் வாழ்க்கையை திருப்பிப் போட்டால்? அப்படி ஒரு நபர் இல்லாவிட்டாலும், இருந்தா நல்லா இருக்கும் என்பதுதான் நம்மில் பலரின் எண்ணமாக இருக்கும். ஒருவேளை அப்படி இருந்தால் அவர் நமக்கு ஒரு குட்டி தேவதையாகத்தான் தெரிவார்.
நம் வாழ்வையே புரட்டிப்போட்ட அந்த நபர் திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டால், எதிர்பாராத சூழ்நிலையில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அங்கு நாம் பேச வார்த்தைகளை தேடிகொண்டிருப்போம். அதுதான் இறுதிக்காட்சியில் யாழினிக்கும் கதிருக்குமான சந்திப்பில் நிகழும். அங்கு அவர்கள் எந்த உணர்ச்சியையும் பரிமாறிக்கொள்ளமாட்டார்கள்... புன்னகையை தவிர. அப்போது அங்கு காதல் கடந்து போயிருக்கும்.. அன்பு தொடங்கியிருக்கும்...
இதையும் படிங்க...'விண்மீன்கள் தாண்டியும் வாழும் காதல் இது' 10YearsOfVinnaithaaandiVaruvaayaa