நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். அப்போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலானது. தொடர்ந்து நடிகர் சிம்பு நிஜ பாம்பு வைத்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் படக்குழுவினர் பிளாஸ்டிக் பாம்பை பயன்படுத்தியுள்ளதாக தன்னிலை விளக்கம் அளித்தனர்.
பின்னர் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு பாம்பை பிடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் படப்பிடிப்பில் நிஜ பாம்பை பயன்படுத்தியதாக நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் பலர் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். இதற்கு படக்குழுவினர் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என கிண்டி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
இருப்பினும் படக்குழுவினர் பதிலளிக்காததால் இன்று (நவ.12) மீண்டும் வனத்துறையினர் தியாகராய நகரில் உள்ள நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். முறையான விளக்கம் அளிக்காமல் இருந்தால் ஈஸ்வரன் படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாத்தி கம்மிங்: தீபாவளி பரிசாக வெளியாகும் 'மாஸ்டர்' டீசர்!