சென்னை: தயாரிப்பாளர் மீது இசையமைப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜெயன்பாலா (45) தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரான ரவிதேஜா வர்மா, நடிகை மனோ சித்ரா நடிப்பில் உருவாகி வரும் ’மாயமுகி’ என்ற திரைப்படத்தில் ஜெயன்பாலா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.
இவருக்கு சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, முன் பணத் தொகையையும் படத்தின் தயாரிப்பாளரான டில்லிபாபு வழங்கியுள்ளார். இதனால் அப்படத்தின் பாடல்களுக்கும் பிற காட்சிகளுக்குமான இசைப் பணிகளை ஜெயபாலா பகுதியளவு முடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான டில்லி பாபு, ’மாயமுகி’ படத்தைத் தான் கைவிடுவதாகவும், இப்படத்திற்காக செய்த இசைப் பணிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கை தன்னிடம் ஒப்படைக்குமாறும் இசையமைப்பாளர் ஜெயபாலாவிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஜெயபாலா தன்னிடம் பேசிய ஒப்பந்தப்படி முன்பணம் போக மீதித் தொகையை அளித்தால் ஹார்டு டிஸ்கை ஒப்படைத்து விடுவதாகக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த டில்லிபாபு, தனக்குத் தெரிந்த ஐந்து நபர்களுடன் சென்று ஜெயபாலாவிடம் ஹார்டு டிஸ்கை ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளரான டில்லிபாபு ஜெயபாலா மீது புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.