கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு குறித்தான எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாததால் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 31ஆம் தேதி வரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைப்பெறாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "கரோனா பரவல் காரணமாக மே 31ஆம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுகின்றன.
கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திரைப்படத் தொழிலாளர்களுக்கு கரோனா நிதியுதவியாக கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். நடிகர் அஜித், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.