தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, 'கரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை பசியால் என் பிள்ளைகள் சாவதைப் பார்க்க முடியவில்லை. ஆகையால் எப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள். இதுதான் பெரும்பான்மையான இன்றைய சினிமா தொழிலாளர்களின் வாழ்வாக உள்ளது.
இந்த கடினமான சூழ்நிலையில் அனைவரும் தொழிலாளர்களுக்கு உதவுகிறார்கள். எங்கள் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் கிடைக்கக்கூடிய உதவிகள் போதவில்லை. எனவேதான் நாங்கள் பணிக்குத் திரும்பும் நிர்பந்தத்தில் உள்ளோம்.
சினிமா என்பது திரையில் பார்ப்பது மட்டுமல்ல. திரைக்குப் பின்னால் 98 விழுக்காடு பேர் இருக்கிறோம். இதில் 40 விழுக்காட்டினர் தினக்கூலியாக இருப்பார்கள். இவர்களின் நிலை இன்று மிகவும் மோசமாக உள்ளது. தற்போது நிலவும் ஊரடங்கு உத்தரவால் 95 விழுக்காடு சினிமா தொழிலாளர்கள் வருமானம் இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் 5 விழுக்காடு தொழிலாளர்கள் அதிக வருவாய் தரக்கூடிய சினிமா தொழிலாளர்களாகவும் இப்போது மாறி உள்ளனர்.
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அந்த படப்பிடிப்பில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது. இதில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என கணக்கு எடுத்துக்கொண்டாலும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்ற நிலையில் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பில் அதிக நபர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
வேலைவாய்ப்பு இல்லாத இந்தச் சூழ்நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் குறைக்கும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. பெரிய திரை நடிகர்கள் ஒரு சிலர் தங்கள் ஊதியத்தில் விழுக்காடு அடிப்படையில் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தனர். இது வரவேற்கத்தக்க விஷயம். சம்பளம் குறைத்துக் கொள்வது என்பது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது. வணிகத்திற்கு ஏற்ப சம்பளம் வேண்டியநிலை கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... 'திரைத்துறை நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’- ஆர்.கே. செல்வமணி