காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கட்டப்படவுள்ள 'அம்மா படப்பிடிப்புத் தளம்' குறித்த பெப்சி அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை வடபழனியில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு நபர்களும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட ஆர்.கே. செல்வமணி கூறுகையில், "பையனூர் அம்மா படப்பிடிப்புத் தளத்தின் கட்டுமானத்திற்கு மொத்தம் ரூ 6.5 கோடி தேவைப்படுகிறது. ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க முன்வருவதாக அறிவித்து, அதன்படி 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முன்பணமாக ஏற்கனவே வழங்கியுள்ளனர்.
படப்பிடிப்புக் கட்டடத்தை 2020 பிப்ரவரி 24ஆம் தேதி திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கியப் படப்பிடிப்புத் தளமாக முன்பு சென்னை இருந்தது. தற்போது ஹைதராபாத்தில் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன.
கோடாம்பாக்கத்திலிருந்து பையனூருக்கு திரைப்பட படப்பிடிப்பை மாற்றுவதில் சிரமம் இருக்கிறது. பெரும்பான்மையான திரைப்படத் தொழிலாளர்கள் கோடம்பாக்கத்தில் இருப்பது உண்மைதான். ஆனால் தற்போது ஐம்பது விழுக்காடு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஈசிஆர் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
எனவே கொஞ்ச நாளில் பையனூருக்கு திரைப்பட படப்பிடிப்பு முழுமையாக மாறிவிடும். அதில் எந்தச் சிக்கலுமில்லை. மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில் நிலைய மாதிரியை விரைவில் பையனூரில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சரியான படப்பிடிப்புத் தளம் இல்லாததால் தமிழ்த் திரையுலகினர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்திய அளவில் படப்பிடிப்புத் தள எண்ணிக்கையில் தமிழ்நாடு தற்போது 6ஆம் இடத்தில் உள்ளது. இந்த நிலை அடுத்த ஐந்தாண்டுக்குள் மாறி தமிழ்நாடு படப்பிடிப்பிற்கு ஏற்ற முதன்மை மாநிலமாகத் திகழும்" என்றார்.