சென்னை: ரசிகர்கள் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் மோகன், புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மைக் மோகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். 1980-களில் தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து இவர், கமல்ஹாசன் - ஷோபா நடித்த கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தி சில்வர் ஜூப்லி ஸ்டார் ஃபேன் கிளப் சார்பில் நடிகர் மோகனுக்குப் பாராட்டு விழா சென்னை மைலாப்பூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் மோகன்:
நான் திரைத் துறைக்கு வந்து பல சில்வர் ஜூப்ளி படங்கள், எத்தனை இயக்குநர்கள், எத்தனை தயாரிப்பாளர்களைச் சம்பாதித்துள்ளேன் என்பதைக் காட்டிலும் உங்களைப் போன்ற ரசிகர்களின் அன்பு உள்ளங்களை சம்பாதித்ததைத்தான் பெருமையாக நினைக்கிறேன்.
உலகம் முழுக்க தமிழர்கள் உள்ளார்கள். அவர்கள் எனக்கு சாகும்வரை சோறு போடுவார்கள் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு. அவர்கள்தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ்.
நான் மீண்டும் திரைத்துறைக்கு வர வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது. அந்த வகையில் மீண்டும் திரைத்துறைக்கு வரவேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஊட்டியது ரசிகர்கள்தான். இந்த நன்றியை 2020இல் ஒரு நல்ல படத்தை கொடுத்த பிறகு தெரிவிக்க வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், தற்போது இந்த விழாவில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையில் நான் பேச வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால், நான் எப்பொழுதும் எனது தயாரிப்பாளர்களை முதலாளி என்றுதான் கூறுவேன். ஒரு தயாரிப்பாளரின் முயற்சி, ஒரு இயக்குநரின் நல்ல திரைக்கதை, வசனம்தான் உங்கள் முன் நான் நிற்பதற்கு காரணம். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றொன்று எனது உதவியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் ஒரு நாளைக்கு 20 முதல் 22 மணி நேரம் உழைப்பேன். ஆனால் எனது உதவியாளர்கள் எனக்காக 30 மணி நேரம் உழைத்துள்ளார் அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்களாகிய உங்களை ஒரு நல்ல படம் கொடுத்துவிட்டு சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். மாதத்துக்கு எனக்கு இரண்டு ஸ்கிரிப்ட் வருகிறது. இருப்பினும் பெருமையாகச் சொல்லக்கூடிய படமாக அமைய வேண்டும் என்பதால்தான் இவ்வளவு காலதாமதம் ஆகியது.
இப்போது கடவுளின் ஆசீர்வாதத்தால் ஒரு நல்ல கதை அமைந்துள்ளது. கண்டிப்பாக இந்தப் படத்தில் நான் நடிக்க உள்ளேன்.
என் பெற்றோர், நண்பர்களைவிட, ரசிகர்கள் நீங்கள் வைத்த அன்பு மட்டும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. உங்கள் அன்பையும், ஆதரவையும் எப்போதும்போல் இந்தப் படத்திற்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.