கோவை ஈஷா யோகா மையத்தின் 26ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர்.
அந்தவகையில், இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற இசை கலைஞரும் சூது கவ்வும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பேட்ட உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள திரு.அந்தோணி தாசன் கலந்து கொள்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் திரு.கார்த்திக் பங்கேற்று தமிழ் பாடல்களை பாட உள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் பார்த்தீவ் கோஹில், ஆதித்யா கத்வி ஆகியோறும் கலந்து கொள்கின்றனர்.
தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும் விழா லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய களைக்கட்ட உள்ளது. மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
மஹாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாளில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரஜினிக்கு அடுத்து ஆட்டோக்காரர்கள் பெருமையைப் பாடிய ரோபோ ஷங்கர் - திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு