நடிகர் சூர்யா சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம், அரசியல் சார்ந்த கருத்துகளை வெளியிட்டுவருகிறார். இதனிடையே சூர்யா பெயரில் வெளியான கடிதம் போலி எனத் தெரியவந்துள்ளது.
அதில், "இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இதற்கான சட்டப் போராட்டத்தை முன்னின்று நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாடு முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்துகொள்கிறேன்.
4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர் கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்த பதிவுச் சுட்டெண் தேசிய, மாநில சராசரியைவிட அதிகமாகும்.

எனவே இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800-க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது என் நம்பிக்கை. சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடை போடட்டும், நாமும் உடன் நிற்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வலம்வரும் போலி கடிதத்தை யாரும் நம்ப வேண்டாம் என சூர்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 மொழிகளில் ஓடிடியில் வெளியான புஷ்பா