அண்மையில் தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் தொடர்ந்து பாஜக கட்சயில் இணைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகை நமீதா, நடிகை கௌதமி, நடிகை குஷ்பூ, நடிகர் ராதா ரவி உள்ளிட்டவர்கள் சமீபத்தில் இணைந்தனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளராக இருந்து, அதிலிருந்து விலகி, தான் அதிகம் விமர்சித்த பாஜக கட்சியில் குஷ்பூ இணைத்தது தமிழ்நாடு அரசியலில் பேசும் பொருளாக மாறியது.
குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்த தருணத்தில்கூட அதை அவர் வீண் வதந்திகள் என்றே கூறினார். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சமீபத்தில் குஷ்பூ பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பாஜகவில் விரைவில் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த தகவலை எஸ்ஏசந்திரசேகர் முற்றிலும் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரத்யேகமாக ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “சிலர் பிரபலம் ஆக வேண்டும் என்று என்னை பற்றி சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரப்பி வருகின்றனர். நான் நடிகர் விஜய் தந்தை என்பதால் என்னை பற்றி பேசினால், அது விஜய்யை குறிக்கும். விரைவில் வைரலாகிவிடும். அதிகம் பேர் அதை பார்க்கக்கூடும். இது ஒரு கேவலமான சம்பாதித்தியம்” என்றார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இன்றும் சினிமாவில் நீதித்துறை பற்றி காட்சிகள் வைக்கும் தேவையுள்ளது என்றார். தற்போது குற்றங்கள் தொழில்நுட்பம் சார்ந்து நடைபெறுவதால் அதற்கான சட்டங்கள், தண்டனைகள் மாற்றி அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இது என்னுடைய பார்வை என நறுக்கென பதிலளித்தார்.
தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளாகிய 800 திரைப்படம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு,” '800' திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி பின் வாங்கியிருக்கக்கூடாது. பிடித்தால் நடிப்பது அவரவர் உரிமை. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு எதிர்ப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். தற்போது எல்லா அரசியல் கட்சிகளும் வியாபார நோக்கத்தில் செயல்படுவது போல்தான் எனக்கு தெரிகிறது. சமூகத்திற்கு சேவை என்பது போய் இன்று சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் கட்சிகள் உள்ளன”என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
தாங்கள் நடிக்கும் படங்களில் நடிகர்கள் மக்களுக்கான கருத்துகளைச் சொன்னால் போதும். தவிர மேடைகளில் சொல்ல வேண்டும் என்று இல்லை. அரசியலுக்கு வரும்போது மேடைகளில் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாஜகவில் குஷ்பூ: பிளான் என்ன?