சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சினிமாவிற்கும் எப்போதுமே ஆகாது. ரஜினியின் பாபா தொடங்கி தற்போது வரை பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. பாபா தொடங்கி விஜயின் சர்க்கார் வரை தொடர்ந்த இப்பிரச்சினை ஜெய்பீம் மூலம் பெரிதாகியது. பாபா படத்தில் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருந்ததால் பாமக எதிர்ப்பு தெரிவித்தது. வட தமிழகத்தில் போராட்டம் நடத்தியதால் திரையரங்கு உரிமையாளர்கள் கதிகலங்கினர்.
அதே போல் விஜயின் சர்க்கார் படத்தின் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்ததால் மீண்டும் பாமக போர்க்கொடி தூக்கியது. இவை எல்லாம் சமூக அக்கறையுடன் கூடியது என்று விட்டுவிடலாம். ஆனால் ஜெய்பீம் விவகாரம் வேறுமாதிரியானது.
ஜெய்பீம் திரைப்படம் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்களின் கதையை சொல்லியிருந்தார் இயக்குனர் ஞானவேல். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படிருந்தது.
சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆனால் இப்படத்தில் வரும் காவல்துறை அதிகாரி வேடம் தங்களது சமூகத்தை வன்முறையாளர்களாக காட்டப்பட்டுள்ளதாக கொந்தளித்தனர் பாமகவினர். . இதனால் ஜெய்பீம் படத்தில் தங்கள் சமூகத்தை இழிவாக காட்டிவிட்டதாக கூறி அப்படத்தில் நடித்த சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டத்தில் பாமக இறங்கியது.
ஒரு படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கு அதன் இயக்குனரே முழு பொறுப்பு. அதை விட்டுவிட்டு அப்படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த நடிகர் எப்படி பொறுப்பாக முடியும் என்பது நடுநிலையாளர்களின் வாதம். ஆனாலும் அதனை எல்லாம் ஏற்றுக்கொள்ள மனமில்லாத பாமக விட்டுக்கொடுப்பதாக இல்லை.
போலீஸ் பாதுகாப்புடன் படம் ரிலீஸ்
அந்த பிரச்சினை தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் பற்றிக்கொண்டது. சூர்யா மன்னிப்பு கேட்காத வரை தமிழகத்தில் இப்படத்தை வெளியிடக்கூடாது என பாமக மிரட்டல் விடுத்தது. தலைகள் ஒதுங்கி வேடிக்கை பார்க்க அக்கட்சியின் வால் ஆட ஆரம்பித்தது. மீறி வெளியிட்டால் திரையரங்குகள் தாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் சென்னை உட்பட படம் வெளியான திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜனிடம் கேட்டபோது, “பாமகவின் இத்தகைய செயல் தவறானது. பலகோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொழிலை முடக்கம் செய்யக்கூடாது. இது சூர்யாவின் சொந்த படம் கிடையாது. வேறு தயாரிப்பாளரின் படம். ஜெய்பீம் பிரச்சினையை அப்படத்தின் போதே முடித்துவிட வேண்டும். இது மற்றவர் படம். ராமதாஸ் எல்லாம் தெரிந்தவர். அவர் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். திரையரங்குகளை தாக்குவது எல்லாம் தவறான செயல்” என்றார்.
ரஜினி, விஜய்
திரைப்படங்களில் நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோர் படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் இருந்ததால் சமூக நலன் கருதி பாமக போராட்டம் நடத்தியது. தற்போது சூர்யா படத்திற்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்திற்கு சிக்கல்!