பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக, ராக்ஸ்டார் என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதன் டீஸரை நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பாடகர்கள் மனோ, ஶ்ரீநிவாஸ் ஆகியோர் நிகழ்ச்சி நடுவர்களாக பங்கேற்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராக்ஸடார் நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாடகர்கள் மனோ, ஶ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் மோகன்ராஜா, லிங்குசாமி, அசோக், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், ”எத்தனையோ இசை கலைஞர்கள் அங்கீகாரமின்றி தெருக்களில், கோயில்களில் என பல்வேறு இடங்களில் பாடி வருகின்றனர். அவர்களைப் போன்ற திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களது திறமைகளை அடையாளம் காட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். கரோனா எல்லோருக்கும் தக்க பாடத்தைப் புகட்டிச் சென்றுள்ளது.
நாம் காசு, பணம், புகழ் என சம்பாதித்தாலும் இயற்கைக்கு முன் எதுவுமே செய்ய முடியாது என்பதை இந்த கரோனா கூறி சென்றுள்ளது” என்றார்.