டெல்லி: இந்திய சினிமா பற்றி புகழ்ந்து பேசிய ட்ரம்ப், பாலிவுட் சினிமாக்களைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் இரண்டாயிரம் திரைப்படங்கள் வெளியாகின்றன. உலகம் முழுவதும் ரசிகர்கள் இந்தியப் படங்களைக் கண்டுகளிக்கின்றனர்.
பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, ஷோலே போன்ற படங்களைப் பார்ப்பதில் உலகமே மகிழ்ச்சி கொள்கிறது. பாங்ரா நடனத்தைக் கண்டு ரசிப்பதில் பலரும் ஆர்வம்காட்டுகின்றனர். கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, சச்சின் போன்றவர்களை இந்தியர்கள் பெரிதும் கொண்டாடுகிறார்கள்" என்றார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'. 'DDLJ' என்ற பெயரில் சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்தப் படம் காதல் திரைப்படமாக இருந்தாலும், குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும்விதமாக அமைந்திருக்கும். வட இந்தியா மட்டுமில்லாமல், தென்னிந்தியாவிலும் பிரபலமான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
10 ஃபிலிம் பேர் விருதுகளும், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்ற இப்படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியிருப்பார். இறப்பதற்குள் பார்க்க வேண்டிய சிறந்த இந்தி படமாகவும், பாலிவுட் எவர்கிரீன் படத்துக்கான பட்டியலிலும் இந்தப் படம் இடம்பிடித்துள்ளது.
இதேபோல் 1975இல் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமான 'ஷோலே' படமும் 9 ஃபிலிம்பேர் விருதுகளை வென்ற பாலிவுட்டின் சிறந்த படமாகத் திகழ்வதுடன், பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது.